கோடையில் பறவைகளின் தண்ணீர் தாகம்... பறவைகளுக்கு கொஞ்சம் தண்ணீர் வைங்க
பொள்ளாச்சி, மார்ச்.12.,
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் சார்பில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் எதிரொலியாக, இயற்கையை நேசி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தொடர்ந்து தனது வீடுகளில் தண்ணீர் வைத்து வருகிறார்கள்.
இதுகுறித்து இயற்கையை நேசி அறக்கட்டளையைச் சேர்ந்த நிர்வாக அறங்காவலர் வெற்றிவேல் கூறுகையில், தற்போது, கோடைகாலம் தொடங்கயிருப்பதால் சுட்டெரிக்கும் வெயிலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பறவைகளுக்கு தற்போது தண்ணீர் கிடைப்பது அரிதாகி வருகிறது. இதனால்,பறவைகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றன. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழக்க நேருகிறது. இதை பொதுமக்களும் உணர்ந்து தங்களது வீடுகளின் வெளிப்புறத்தில் மற்றும் மதில் சுவருகளில் ஒரு சிறிய கிண்ணத்தில், பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகம் தீர்க்க முன்வரவேண்டும்.
இதை யார் செய்வதென்று கடந்துபோகாமல் சின்னஞ்சிறு உயிரினம் தண்ணீருக்காக தவித்து உயிரிழக்கும் என்பதை உணர்ந்து பறவைகளுக்கு கொஞ்சம் தண்ணீர் வையுங்கள் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு, அறக்கட்டளை சார்பில் எங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரிமா.கமலக்கண்ணன் மற்றும் அறங்காவலர்கள், உறுப்பினர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். இன்னும் ஐந்து, ஆறு நாட்களில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.