புல்வாய்கள். ஆங்கிலத்தில் பிளாக் பக் என்று அழைக்கப்படும் இரலை (antelope) இனம்.
மான் (Deer) போன்று இருந்தாலும் இரலை என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு இனம். மானுக்கும், இரலைக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.
ஆண் மான்களின் கொம்புகள் ஒவ்வொரு வருடமும் விழுந்து புதிதாய் முளைக்கும். இரலைகளுக்கு ஒரு முறை முளைக்கும் கொம்புகள் கடைசி வரை இருக்கும். அடுத்த முக்கிய வித்தியாசம் மான்களின் கொம்புகள் கிளைகள் போல விரியும். இரலைகளின் கொம்புகள் அப்படி இல்லாமல், நேர்கோட்டில் சின்ன வித்தியாசங்களை கொண்டு இருக்கும்.
உலகில் 91 வகை இரலைகளும், 62 வகை மான் இனங்களும் உள்ளன.
இந்தியாவில் எத்தனை இரலை, மான் இனங்கள் உள்ளன என்பதை நீங்கள் comments பகுதியில் தெரிவிக்கலாம்.
தமிழகத்தில் இந்த அழகான இனத்தை நீங்கள் சில இடங்களில் காணலாம்.
1. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்,
2. Point Calimere சரணாலயம், நாகபட்டினம்
3. வல்லநாடு சரணாலயம், திருநெல்வேலி.
4. முதுமலை புலிகள் காப்பகத்தில் சில இடங்கள்.
5. கிண்டி பூங்கா, சென்னை
புல்வெளி பகுதிகள் இவற்றின் பிடித்தமான இடம். அத்தகைய இடங்களை நாம் 99% பிடித்தாயிற்று. எஞ்சி இருக்கும் சில இடங்களிலும் பல்வேறு சவால்களை இவை சந்திக்க வேண்டியதாய் இருக்கிறது. வேட்டையாடுதல் மிகப்பெரிய சவால் என்றாலும், வாழிட சூழல் மாற்றங்கள் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
உதாரணத்திற்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இவை வாழும் இடங்களில் சீமை கருவேலம் என்கிற சுற்றுச்சூழலுக்கு கேடான மரம் அதிகம் உள்ளது. இவை அதிகம் பரவுவதால் இங்கு வாழும் தாவர உண்ணிகளுக்கு புற்கள் தேவையான அளவுக்கு கிடைப்பது சவாலாக உள்ளது.
சீமை கருவேல மரங்கள் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவை இருக்கும் இடங்கள் மிக வறண்டு, சூடான சீதோஷ்ண நிலையை கொண்டிருக்கும். இப்படிப்பட்ட இடங்களில் native species என்று அழைக்கப்படும் நம் மண்ணிற்கு உகந்த, நிலத்தை மேம்படுத்தும் தாவரங்கள் வளர்வது தடைபடும். சீமை கருவேல மரத்தின் காய்களை அதிகமாக உண்பதால் யானை, காட்டு மாடு, மான் போன்றவை இறந்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த களைகளை நீக்கும் பட்சத்தில் அவ்விடம் முக்கியமாக இந்தப் பதிவில் நாம் பேசும் இரலை இனத்திற்கு வாழிடமாக அமையும். அவைகளின் எண்ணிக்கையும் மிகுதியாகும். மண் வளம் பெருகும். மற்ற விலங்குகளின் உணவுத் தேவைகளும் பூர்த்தியாகும்.
இந்தியாவில் வேறு எங்கும் புலிகளும், black buck எனப்படும் புல்வாய் மான்களும் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ரந்தம்போர் புலிகள் காப்பகத்தில் மட்டும் இவைகள் ஒன்றாக காணப்படுகின்றன.
நன்றி Calvin Jose