வணக்கம் உறவுகளே...
வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிக முக்கியமான பொக்கிசமான நாளாக இந்த ஆண்டு தீபாவளியை (14-11-2020 ) கருதுகிறேன். இயக்கையோடும் மலைவாழ் மக்களோடும் மகிழ்ச்சி பொங்க இந்த நாளை கழித்தேன். பொள்ளாச்சியை அடுத்த நவமலையில் கிடைத்தது இந்த மகிழ்ச்சி.
மேற்குத்தொடர்ச்சி மலையில் எந்தவொரு அச்சமுமின்றி விலங்குகளும் மனிதனும் வாழ்கிறார்கள். அவர்களின் உண்மையான அன்பும் பாசமும் எனக்கு புதிதாக இருந்தது. நவநாகரிக மனிதனுக்கு இரண்டுமுகம் இருக்கும். நாம் இருக்கும்போது பெருமையாக பேசுவார்கள். நாம் இல்லாதபோது கேவலமாக தூற்றுவார்கள். ஆனால் மலையில் வாழும் மனிதர்கள் அப்படி அல்ல. என்றும் ஒரேமாதிரியாக வாழப்பவர்கள்.
நாவில் உமிழ்நீர் ஊறுகிறது
என்னை அவர்கள் அரவணைத்த விதம் இன்னும் என் கண்களைவிட்டு மறையவில்லை. வாழைப்பழம், நெல்லிக்கனி, தேன், கொடுத்தார்கள். இன்னும் என் நாவில் உமிழ்நீர் ஊறுகிறது. ஆற்றில் மீன் பிடித்து ஆற்றோரத்தில் நெருப்பு மூட்டி நெருப்பில் மீனை சுட்டுக்கொடுத்தார்கள். அந்த சுவையை என்னவென்று சொல்வது. மீன் கொஞ்சம் காரமாக இருக்க மிளகை பொடி செய்து மீனில் தடவி சுட்டுக்கொடுத்தார்கள்.
நமது வாழ்வில் அவர்களோடு ஒருநாளாவது வாழவேண்டும். மூலிகை தண்ணீரில் குளித்து, குடித்து சுத்தமான காற்றை சுவாசிக்க ஒருநாளாவது அந்த வாழ்க்கை வாழவேண்டும்.
நாகரிக மனிதர்கள் என்ற கர்வத்தால் இயற்கையை அழிப்பதும் வனவிலங்குகளை துன்புறுத்துவதும் இந்த நவநாகரிக கோமாளிகளால் வாடிக்கையாக போனது.
இயற்கையை பற்றிய புரிதல் இல்லாததாலும் வனவிலங்குகளைப்பற்றிய அறிதலைப்பற்றி தெரியாத நவநாகரிக கோமாளிகள் வனத்திற்குள் சென்று வனவிலங்குகளை துன்புறுத்துகிறார்கள். வனவிலங்குகளின் வாழ்வியல் பற்றி தெரிந்தவர்கள் வனவிலங்குகளை நேசிக்கிறார்கள். அதன் தேவையறிகிறார்கள்.
பறந்து விரிந்து இருக்கும் வனத்தை பணத்தாசை பிடித்தவர்கள் தேவைக்காக வனத்தில் இருக்கும் மரங்களை வெட்டி விற்பனை செய்வதாலும் மலைப்பாதை விரிவாக்கம் என்ற பெயரில் வனத்தின் அளவை குறைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
வனவிலங்குகள் தனது வாழ்வியல் அழிவதை பொறுத்துக்கொள்ளாது நகரத்துக்குள் படையெடுக்கிறது. ஊருக்குள் யானை வந்தது, புலி வந்தது என்று சொல்கிறார்கள். ஆனால் அவைகள் ஏன் வருகிறது என்ற கேள்வியை யாரிடம் கேட்பது.
விலங்குகள் தனக்கு தேவையான உணவை தவிர அளவிற்கு மீறி உண்பதில்லை. அவைகளுக்கு சொந்தமாக இருப்பிடமோ பணத்தாசையோ இல்லை. மலையின் அளவைக்குறைத்து அதன் தேவைகளை அழிப்பது மனித வாழ்விற்கு நாள்குறிக்கும் துரதிர்ஷ்டமானது.
வனவிலங்குகளுக்கு சரியாக உணவு கிடைப்பதில்லை. இனிவரும் காலங்களிலாவது இயற்கையை பேணிக்காப்போம்...
மா.வெற்றிவேல் ( ஆசிரியர் )
வேங்கை வெற்றி குழுமம்