பொள்ளாச்சி ஆனைமலை சாலையில் உள்ள மரங்களை வெட்ட நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டிருப்பதை இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை வன்மையாக கண்டிக்கிறது.
பொள்ளாச்சி ஆனைமலை சாலை தாத்தூர் பிரிவு அருகேவுள்ள சாலையோர இருபுறங்களிலும் அடர்த்தியான மரங்கள் உள்ளன. அந்த மரங்களில் பல்வேறு பறவைகள் தங்களின் வீடுகளாக பயன்படுத்தி வருகிறது. இந்தநிலையில், சாலையோர மரங்களை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நெடுஞ்சாலை துறையினர் வெட்ட திட்டமிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதை போல், ஓங்கி வளர்ந்த மரங்களை பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தொழில் வளர்ச்சியினால் மாசடைந்த காற்றை தூய்மைபடுத்துபவை மரங்கள். மனிதன் உயிர் வாழ தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக செயல்படும் மரங்களை பாதுகாக்கப்பட வேண்டும்.
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். அதுபோல பருவம் தவறி மழை பெய்யும்போதும், வெயில் சுட்டெரிக்கும்போதும் தான் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது. இயற்கையின் அருட் கொடையான மரங்களின் அருமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற விழிப்புணர்வு குரல் எங்கும் ஒலிக்கிறது.
பருவ நிலை பாதிப்பு காரணமாக வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற இலக்கை நோக்கி ஒட்டுமொத்த சமூகமும் வீறு நடை போட்டு வருகிறது. அதே நேரத்தில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்கள் எந்தவித மாற்று திட்டங்களும் இன்றி வெட்டி வீழ்த்தப்படுவதை எந்தவொரு காரணங்கள் கொண்டும் ஏற்கமுடியாது .
நெடுஞ்சாலை துறையினர் மரங்களை வெட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுகிறோம்.
மரங்களை பாதுகாப்போம்...
வெறும் சொற்களால் அல்ல...
நம் அனைவரின் ஒத்துழைப்போடு....